சென்னை,
2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மாற்று வீரராக இளம் பேட்ஸ்மேன் திலக் வர்மாவை இந்திய அணி நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் டாப்-ஆர்டரில் பந்துவீசக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லாதது நீண்ட காலமாக கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.
ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி போன்ற ஆல்-ரவுண்டர்கள் அடிக்கடி காயமடைவதால், டாப்-ஆர்டரில் குறைந்தது 4 ஓவர்கள் வீசக்கூடிய ஒரு வீரர் அணியில் இருப்பது அவசியமாகியுள்ளது.
இந்தச் சூழலில், இடதுகை பேட்ஸ்மேனான திலக் வர்மாவை இந்திய அணி நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சை மேலும் மேம்படுத்துமாறு திலக் வர்மாவுக்கு அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், திலக் வர்மாவை மாற்று வீரராக பரிசீலிப்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.
ராய்பூரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4-வது வரிசையில் களமிறங்கி சதமடித்து தனது திறமையை நிரூபித்தவர் ருதுராஜ் கெய்க்வாட். ஆனால், அந்த இன்னிங்ஸுக்குப் பிறகு அவருக்கு ஒருநாள் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால், 4-வது வரிசையில் விளையாடி தனது திறமையை நிரூபித்த ருதுராஜ் கெய்க்வாட்டை விடுத்து திலக் வர்மாவை மாற்று வீரராக பரிசீலிப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.