கிரிக்கெட்

அறிமுகப் போட்டியிலேயே இங்கிலாந்தை அலறவிட்ட 21 வயது இளம் புயல்..... 6 விக்கெட்டுகளுடன் புதிய வரலாறு

தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு மற்றொரு வேகப்பந்து வீச்சு நட்சத்திரம் கிடைத்துவிட்டார் என்பதை நிரூபிக்கும் வகையில், 21 வயதான இளம் வீரர் மஹ்லி பியர்ட்மேன் தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

பெர்த்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய அவர், இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தார்.

தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கிய பியர்ட்மேன், முதல் ஓவரிலேயே மெய்டன் ஓவர் வீசி தனது திறமையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கை ஆட்டமிழக்கச் செய்த அவர், அடுத்த ஓவரில் அனுபவ வீரர் ஜோ ரூட்டையும் வெளியேற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன்பிறகு ஜோர்டன் காக்ஸ், சாம் கரன், லியாம் டாசன் ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஐந்து விக்கெட் சாதனையை எட்டினார். இறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சரையும் வீழ்த்தி தனது அறிமுகப் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

வெறும் 7.4 ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மணிக்கு 145.4 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசிய அவர், வேகம் மட்டுமின்றி பந்தை ஸ்விங் செய்யும் திறமையாலும் இங்கிலாந்து வீரர்களைத் திணறடித்தார். அவரது அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 33.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

38 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் வீரர்!

இதற்கு முன்பு 1988ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் டோனி டோட்மைட், இலங்கைக்கு எதிரான அறிமுக ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஆஸ்திரேலிய வீரரின் சிறந்த அறிமுகப் பந்துவீச்சாக இருந்தது. தற்போது 38 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சாதனையை முறியடித்து 6/24 என்ற புதிய சாதனையை பியர்ட்மேன் படைத்துள்ளார்

இளம் வயதிலேயே உலகக் கோப்பை அனுபவம்!

2024ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் பியர்ட்மேனும் இடம்பெற்றிருந்தார். இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். தற்போது சீனியர் அணியிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்

SCROLL FOR NEXT