கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சிட்னி,

ஆஸ்திரேலிய மகளிர் அணி, வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் பீல்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, தொடக்கத்தில் 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய சோபானா மொஸ்டரி, கேப்டன் நிகர் சுல்தானாவுடன் இணைந்து சிறப்பாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டார். மொஸ்டரி 134 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். இதில் 18 பவுண்டரிகள் அடங்கும். நிகர் சுல்தானா ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார். இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தனர்.

மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் வங்கதேச வீராங்கனை என்ற பெருமையையும் மொஸ்டரி பெற்றார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது.

221 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜியா வோல் மற்றும் போப் லிட்ச்ஃபீல்ட் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். லிட்ச்ஃபீல்ட் 51 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். மறுபுறம் அபாரமாக விளையாடிய வோல், 97 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 131 ரன்கள் குவித்தார். இதில் 19 பவுண்டரிகள் அடங்கும். அவர் 81 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 28.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 222 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வோலின் அதிரடி ஆட்டத்தால் மொஸ்டரியின் வரலாற்றுச் சதம் வெற்றியாக மாறவில்லை. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

SCROLL FOR NEXT