கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: இந்தியா- நியூசிலாந்து இன்று மோதல்

இந்தியா- நியூசிலாந்து மோதும் 2-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆக்லாந் தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து மோதும் 2-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்திய வீரர்கள்

முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை 185 ரன்னில் சுருட்டிய இந்தியா, பின்னர் அதை நோக்கி ஆடிய போது மழை குறுக்கிட்டதால் மாற்றியமைக்கப்பட்ட 143 ரன் இலக்கை 22.4 ஒவர்களில் எட்டிப்பிடித்தது. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப்சிங் (4 விக்கெட்), குர்னூர் பிரார் (3). அன்ஷூல் கம்போஜ் (2) கலக்கினர். பேட்டிங்கில் விராட் கோலி 74 ரன்கள் விளாசி அமர்க்களப்படுத்தினார். மற்றொரு மூத்த வீரர் ரோகித் சர்மா டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார், தொடரை வெற்றியோடு தொடங்கிய இந்திய வீரர்கள் அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் களம் காணுவார்கள். அனேகமாக அணியில் மாற்றம் ஏதும் இருக்காது.

நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணியில் முதல் ஆட்டத்தில் டிம் செய்பெர்ட் (38 ரன்), டேரில் மிட்செல் (28 ரன்), கிளென் பிலிப்ஸ் (30 ரன்) பிளேர் டிக்னெர் (34 ரன்) ஆகியோர் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். குறிப்பாக இந்திய பவுலர்களின் ஷாட்பிட்ச் யுக்தியை சமாளிக்க முடியாமல் சரண் அடைந்தனர். இந்த முறை தவறுகளை திருத்திக் கொண்டு எழுச்சி பெறும் முனைப்புடன் உள்ளனர்.

வெலிங்டனில் நேற்று விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு சென்று பயிற்சி எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டது. நியூசிலாந்து வீரர்கள் வெலிங்டன் கல்லூரியில் உள்ள உள்அரங்கில் பயிற்சியில் ஈடுபட்டனர். மழையால் இன்றைய போட்டி பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இன்று அங்கு மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தக வல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT