கிரிக்கெட்

2-வது டி20: கமில் மிஷாரா, தசுன் ஷனகா அரைசதம்; வெஸ்ட் இண்டீஸுக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

கமில் மிஷாரா அதிகபட்சமாக 61(40) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

விக்கெட் சரிவு

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் 5-வது ஓவரில் பதும் நிசாங்கா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய குசல் மெண்டிஸ் 19 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் 6-வது ஓவரில் வெளியேறினார்.

மிஷாரா - கமிந்து கூட்டணி மீட்பு

அடுத்து களமிறங்கிய கமில் மிஷாரா மற்றும் பவன் ரத்நாயக்க ஜோடி அணியை மீட்டெடுக்க முயன்றது. எனினும் பவன் ரத்நாயக்க 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதன்பின் கமில் மிஷாரா மற்றும் கமிந்து மெண்டிஸ் இணைந்து இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டனர். கமிந்து மெண்டிஸ் 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அரைசதம் விளாசிய கமில் மிஷாரா, தசுன் ஷனகா

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கமில் மிஷாரா தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவருடன் அதிரடியாக ஆடிய தசுன் ஷனகாவும் வேகமாக அரைசதம் கடந்தார். தொடர்ந்து இருவரும் அதிரடி காட்ட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அப்போது கடைசி ஓவரில் தசுன் ஷனகா 58(24) ரன்களில் அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு இலக்கு

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை பதிவு செய்தது. கமில் மிஷாரா அதிகபட்சமாக 61(40) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, இலங்கை நிர்ணயித்த 195 ரன்கள் இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.