image courtesy:BCCI 
கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: இந்திய அணி அபார பேட்டிங்... இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

இந்திய அணியின் 2-வது இன்னிங்சில் அதிகபட்சமாக சுப்மன் கில் 161 ரன்கள் அடித்தார்.

பர்மிங்காம்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 184 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹாரி புரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 244 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் கருண் நாயர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த கே.எல்.ராகுல் 55 ரன்களில் அவுட்டானார். இதன் பின்னர் கைகோர்த்த ரிஷப் பண்ட் - சுப்மன் கில் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதில் ரிஷப் பண்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய பண்ட் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் சுப்மன் கில்லும் அரைசதத்தை கடந்தார். அதிரடியாக விளையாடிய பண்ட் 65 ரன்களில் (58 பந்துகள்) அவுட்டானார். அடுத்து சுப்மன் கில்லுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். நேரம் செல்ல செல்ல சுப்மன் கில்லும் அதிரடியாக விளையாட தொடங்கினார்.

இதனால் அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. அனுபவ வீரரான ஜடேஜாவும் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். நடப்பு தொடரில் சிறப்பான பார்மில் விளையாடி வரும் சுப்மன் கில் அதனை இந்த இன்னிங்சிலும் தொடர்ந்தார். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (269 ரன்கள்) அடித்து அசத்திய சுப்மன் கில் இந்த இன்னிங்சில் சதமடித்து அசத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஜடேஜா இந்த இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார்.

இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 400 ரன்களை கடந்தது. தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 161 ரன்களில் ஷோயப் சோயிப் பஷீரின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். கில் - ஜடேஜா 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி ஒரு ரன்னில் நடையை கட்டினார். பின்னர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 83 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் அடித்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இந்திய அணி 607 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜடேஜா 69 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங் மற்றும் சோயிப் பஷீர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி 608 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய உள்ளது.