இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, வில் யங்கின் அபார சதத்தின் உதவியுடன் 333 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய வில் யங், டிம் சீபெர்ட் இருவரும் இந்திய பந்துவீச்சைச் சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில், டிம் சீஃபெர்ட் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்திருந்தபோது குர்னூர் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக் கெல்லி 4 ரன்களிலும், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 8 ரன்களிலும் வெளியேறினர்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய வில் யங், இந்திய பந்துவீச்சாளர்களைச் சமாளித்து ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்த ஃபின் ஆலனும் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய ஆலனை ரோஹித் சர்மா அபாரமாக கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இதையடுத்து வில் யங் தொடர்ந்து நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்து அணிக்கு வலுசேர்த்தார்.
நியூசிலாந்து அணி நிர்ணயித்த 334 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி தனது அபாரமான பந்துவீச்சால் இந்திய அணியின் டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்தார்.
முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா, தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது.
அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் ஹென்றியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 4 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரே போட்டியில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் டக் அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், ஹென்றியின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி ஒரு ரன் கூட எடுப்பதற்கு முன்பாகவே 3 விக்கெட்டுகளை இழந்து வரலாற்றில் மோசமான தொடக்கத்தைப் பதிவு செய்தது.பின்னர் ருதுராஜ் கெயிக்வாட் 5 ரன்களில் வெளியேறினார்.
இந்திய அணி 334 ரன்கள் என்ற இலக்கை எட்ட வேண்டிய நிலையில், தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது.