டுப்லின்,
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 206 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 7ம் தேதி நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறு வருகிறது.
பெல்பாஸ்ட் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, களமிறங்கிய அயர்லாந்து வீரர்கள் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் அயர்லாந்து 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹெவின் ஹொய் அதிகபட்சமாக 36 ரன்களை சேர்த்தார்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரஷீத் கான், கசன்பர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கி விளையாட உள்ளது.