புதுடெல்லி,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் அபிஷேக் சர்மா இஷான் கிஷன் இருவரும் சிறப்பாக விளையாடினர். இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். இஷான் கிஷன் 37 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து நிலைத்து விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் அடித்தார். திலக் வர்மா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. முந்தைய போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷாய் ஹோப் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மயருடன் கமில் பூரன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தது.
பூரன் 42 ரன்களிலும், ஹெட்மயர் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ரூதர்போர்டு அதிரடி காட்டி 32 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரால் அணியை வெற்றிபெறச் செய்ய முடியவில்லை. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி தரப்பில் அர்ஸ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி ஐதராபாத் மைதானத்தில் வருகிற புதன் கிழமை நடைபெற உள்ளது.