வெலிங்டன்,
3வது டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. அந்தணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மாவும், வைபவ் சூர்யவன்ஷியும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர்.
நியூசிலாந்து பந்துவீச்சைச் சிதறடித்த அபிஷேக் சர்மா வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய அபிஷேக் சர்மா, பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு 35 பந்துகளில் சதமடித்தார். அதிரடி காட்டிய அவர் 38 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 11 சிக்சர்கள் அடங்கும்.
அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியது.