ஹராரே,
தொடர் நாயகன் விருது வென்ற வைபவ் சூர்யவன்ஷி கனவு நனவானதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. இதில் வைபவ் சூர்யவன்ஷி 49 பந்துகளில் 81 ரன்கள் விளாசி இந்தியா பெரிய இலக்கை எட்ட முக்கிய பங்காற்றினார். பின்னர் ஜிம்பாப்வே அணியை 157 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டிக்கு பிறகு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, "இது எனக்கு கனவு நனவான தருணம். எனது முதல் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இங்கு விளையாடிய அனுபவம் இருப்பதால், இந்த மைதானத்தில் விளையாடுவதை மிகவும் ரசித்தேன்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "டி20 கிரிக்கெட்டில் நான் வழக்கமாக எப்படி விளையாடுவேனோ, அதே அணுகுமுறையில்தான் இந்த தொடரிலும் விளையாடினேன். ஒவ்வொரு போட்டியிலும் அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்குவதே எனது நோக்கமாக இருந்தது. நல்ல தொடக்கம் கிடைத்தால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். பயிற்சியில் எந்த ஷாட்களை அதிகமாக பயிற்சி செய்கிறேனோ, அதையே போட்டியிலும் செயல்படுத்த முயற்சித்தேன்" என தெரிவித்தார்.