கிரிக்கெட்

3வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில்முன்னிலை வகிக்கிறது.

ஆக்லாந்து,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையே இன்று 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே தடுமாறினர். யாரும் 30 ரன்களை கூட தாண்டவில்லை.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன், சாண்ட்னர், சியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். டாம் லாதம் அரைசதமடித்து அசத்தினார். அவர் 63 ரன்களும் , கான்வே 39 ரன்களும் எடுத்தனர்.

இதனால் நியூசிலாந்து அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.