டுப்லின்,
அயர்லாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. பெல்பாஸ்ட் நகரில் உள்ள மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 343 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் இப்ராகிம் 107 ரன்களும் , சித்திகுல்லா அடல் 107 ரன்களும் குவித்தனர். இதையடுத்து, 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்கியது.
தொடக்க வீரர் ஆண்டி பால்பிர்னி அபாரமாக பேட்டிங் செய்து சதம் அடித்தார். அவர் 119 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 109 ரன்கள் குவித்தார். கர்டிஸ் கேம்பர் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார்.
எனினும், மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறியதால் அயர்லாந்து அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.