கிரிக்கெட்

4வது டி20: நியூசிலாந்து அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

சென்னை,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டி20 போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச, தென் ஆப்பிரிக்க தரப்பில் வியான் முல்டர் மற்றும் டோனி டி சோர்சி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில், வியான் முல்டர் ரன் ஏதும் 0(2) எடுக்காமல் வெளியேறினார். அடுத்து டோனி டி சோர்சியுடன் கானர் எஸ்டர்ஹுய்சென் ஜோடி சேர்ந்தார்.இதில் டோனி டி சோர்சி நிதானமாக ஆட, அதிரடியில் இறங்கிய கானர் எஸ்டர்ஹுய்சென் அரைசதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில், கானர் எஸ்டர்ஹுய்சென் 57(36) ரன்களில் இருந்தபோது அவுட்டானார். தொடர்ந்து, மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த டோனி டி சோர்சியும் 23(21) ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.நியூசிலாந்து தரப்பில் கைல் ஜெமிசன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து விளையாடியது.

தொடக்கம் முதல் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நியூசிலாந்து அணியில் டிம் ராபின்சன் நிலைத்து ஆடி 32 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 18.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆட்டமிழந்தது. இதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.தென் ஆப்பிரிக்க அணியில் கோயட்ஸி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதனால் தொடர் 2-2 என சமனில் இருக்கிறது.