கிரிக்கெட்

தொடர்ச்சியாக 6 தோல்விகள்... பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் புலம்பல்

பவர்பிளேயில் விக்கெட்டுகளை இழந்தபோதே ஆட்டம் கைநழுவிப் போனதாக ஸ்ரேயஸ் ஐயர் கூறினார்.

மும்பை,

ஐ.பி.எல். தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், பெங்களூரு அணி மட்டும் பிளே ஆப் சுற்றை உறுதிசெய்துள்ளது. எஞ்சிய 3 இடங்களுக்கு 7 அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

தொடரின் முதல் ஆறு போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணி, கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது. ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும், சமீபத்திய தொடர் தோல்விகள் அந்த அணி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய தோல்விக்கு பின் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறி இருப்பதாவது:

பெங்களூரு அணி ஒரு சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 222 ரன்களை எட்டினர். பந்துவீச்சில் எங்களால் அவ்வளவாக விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை..

நாங்கள் பேட்டிங் செய்தபோது பவர்பிளேயிலேயே இந்த ஆட்டம் கைநழுவிப் போனது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தோம். எங்கள் அணியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பிரப்சிம்ரன் மற்றும் பிரியான்ஷ். பவர்பிளேயில் அவர்கள் கொடுக்கும் தொடக்கத்தை, இந்த முறை எங்களால் பெற முடியவில்லை. மேலும் நானும் சீக்கிரமே ஆட்டமிழந்ததும் ஏமாற்றமளிக்கிறது.

ஆனால் ஷஷாங்க் மற்றும் ஸ்டோனிஸ் இருவரின் செயல்பாடு பாராட்டத்தக்கது. நாங்கள் ஓவருக்கு கிட்டத்தட்ட 10 ரன்கள் எடுத்திருந்தோம். ஆனால் இலக்கை எட்டத் தவறிவிட்டோம். புவனேஸ்வர் மற்றும் ஹேசில்வுட் அபாரமான பந்து வீசினார்கள்.

வெற்றி, தோல்வியை பொருட்படுத்தாமல் நான் எப்போதும் நேர்மறையாகவே இருப்பேன். தோல்விகளை நினைத்து அதிகம் மூழ்கி இருப்பவன் நான் கிடையாது. இந்த போட்டி முடிந்துவிட்டது. நாளை மீண்டும் புதிய சூரிய உதயத்தைக் காணப் போகிறேன். சுரங்கப்பாதையின் முடிவில் எப்போதும் ஒளி உண்டு.”

இவ்வாறு அவர் கூறினார்.