கிரிக்கெட்

29 பந்தில் 97 ரன்கள்... ஆட்டநாயகன் வைபவ் சூர்யவன்ஷி கூறியது என்ன.?

எதிரணியின் திட்டத்தை சிந்திப்பதில்லை என வைபவ் சூர்யவன்ஷி கூறினார்.

நியூ சண்டிகர்,

குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய வெளியேறுதல் சுற்று ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி, 16 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். 30 பந்துகளில் சதமடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகளும், 12 சிக்சர்களும் அடங்கும்.

சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி, குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக வைபவ் சூர்யவன்ஷி தேர்வானார். வெற்றி குறித்தும், தனது ஆட்டம் குறித்தும் வர்ணனையாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து சூர்யவன்ஷி கூறியதாவது;

கேள்வி: வெற்றி குறித்து..

பதில்: இன்றைய வெற்றியை எடுத்துக்கொண்டு, இதே உத்வேகத்தை அடுத்த போட்டிக்கு கொண்டு செல்ல வேண்டும். அடுத்த போட்டியிலும் இதே போல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குச் செல்ல முயற்சிப்போம்.

கேள்வி: அடுத்த ஆட்டம் குறித்த மனநிலை எப்படி.?

பதில்: அடுத்த ஆட்டத்திலும் எனது வழக்கமான ஆட்டத்தை விளையாட முயற்சிப்பேன். அதிகமாக யோசிக்க மாட்டேன். ஆனால், நான் மேம்படுத்த வேண்டிய ஒன்று இருப்பதாக உணர்ந்தால், அதைப் பார்ப்பேன்.

கேள்வி: போட்டிக்கு தயாராவது எப்படி.?

பதில்: எதிரணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் யார், இந்த விக்கெட்டில் அவர்களை நான் எப்படி எதிர்கொள்ள முடியும், பவுண்டரிகள் எவ்வளவு பெரியவை, இது போன்ற விஷயங்களைப் பற்றி சிந்திப்பேன். நேர்மறையாக இருக்க முயற்சிப்பேன். அவ்வாறு இருக்கும்போது, ​​பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் இருப்பார்கள். எனவே, அதைத் தொடரவும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தவும் முயற்சிப்பேன்.

கேள்வி: அதிவேக சதத்தை தவறவிட்டது தெரியுமா.?

பதில்: நான் ஆட்டமிழந்த பிறகுதான் கிறிஸ் கெயிலின் சாதனையை தவறவிட்டது குறித்து எனக்குத் தெரிந்தது. அணிக்காக என்னால் முடிந்தவரை பங்களிப்பதே என் ஒரே நோக்கமாக இருந்தது. ஏனென்றால், சதங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். ஆனால் கோப்பையை எப்படி வெல்வது என்பதில்தான் எனது கவனம் உள்ளது. எதிரணி என்ன திட்டமிடுகிறது என்பதைப் பற்றி நான் சிந்திப்பதில்லை. அது அவர்களுடைய திட்டம். என் திட்டத்தில் கவனம் செலுத்தி, இயல்பான கிரிக்கெட்டை விளையாட முயற்சிப்பேன்.”

இவ்வாறு வைபவ் சூர்யவன்ஷி கூறினார்.