கிரிக்கெட்

282 ரன்கள் சேஸ்... ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த இங்கிலாந்து பெண்கள் அணி

அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

லண்டன்,

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 282 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து இங்கிலாந்து பெண்கள் அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டி

அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

281 ரன்கள்

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கேபி லூயிஸ் 69(89) , ஏமி ஹண்டர் 62(90) மற்றும் ரெபெக்கா ஸ்டோக்கெல் 54(48) அரைசதம் கடந்து அசத்தினர்.

அபார வெற்றி

இதையடுத்து 282 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, அதிரடியாக விளையாடி 38.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 283 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் மையா பவுச்சியர் 104(95) ரன்களும், சோபியா டங்க்லி 73(61) ரன்களும் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

புதிய வரலாறு

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச இலக்கு என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2023-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்டலில் 267 ரன்களை சேஸ் செய்ததே இங்கிலாந்தின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளது.

SCROLL FOR NEXT