கிரிக்கெட்

டெல்லி அணியின் புதிய சகாப்தம் – தலைமைப் பயிற்சியாளராக கங்குலி

தற்போது புதிய நிர்வாக சுழற்சிக்கு மாறியுள்ளது.

புதுடெல்லி,

2027 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி கேபிடல்ஸ் தனது பயிற்சியாளர் குழுவில் பெரிய மாற்றத்தை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு சீசன்களில் ஹேமங் பதானி தலைமையிலான பயிற்சியாளர் குழுவுடன் செயல்பட்ட அணி, தற்போது புதிய நிர்வாக சுழற்சிக்கு மாறியுள்ளது.

கங்குலி டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்றி பின்னர் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார். தற்போது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் கிரிக்கெட் இயக்குநராக இருக்கும் கங்குலி, டெல்லி அணியின் அடுத்த கட்ட திட்டங்களில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

டெல்லி அணியின் புதிய பயிற்சியாளர் குழுவில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திரங்களான யுவராஜ் சிங் மற்றும் அமித் மிஸ்ரா, இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சாமிந்த வாஸ் ஆகியோரும் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளராகவும், சாமிந்த வாஸ் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், அமித் மிஸ்ரா சுழற்பந்து வீச்சு சார்ந்த பயிற்சிப் பொறுப்பிலும் இணைய உள்ளனர்.

இந்த மாற்றம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு புதிய நிர்வாகம், புதிய பயிற்சியாளர் குழு மற்றும் புதிய அணுகுமுறையை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கங்குலியின் தலைமைத்துவ அனுபவமும், யுவராஜின் பேட்டிங் அறிவும், வாஸின் பந்துவீச்சு அனுபவமும் இணைவது அணியின் அடுத்த கட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும், ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் குழுவுடன் அணி 2027 ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள உள்ளது.கடந்த சீசன்களில் பிளேஆஃப் இடத்தைப் பெறத் தவறிய டெல்லி, இந்த புதிய கட்டமைப்பின் மூலம் அணியின் செயல்பாட்டை மாற்ற முயற்சிக்கிறது.

SCROLL FOR NEXT