அபுதாபி,
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 346 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 106 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 372 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற 479 ரன்களை இலக்காக வங்காளதேசம் நிர்ணயித்தது. இதையடுத்து, 479 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், ஆட்டத்தின் கடைசி நாளான இன்று ஆப்கானிஸ்தான் வெற்றிபெற 347 ரன்கள் தேவைப்பட்டது. அதேவேளை, வங்காளதேசம் வெற்றிபெற 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால், இன்றைய கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக இருந்தது.
அதன்படி, கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் வங்காளதேசம் விக்கெட்டுகளை வீழ்த்த முற்பட்டது. அதேவேளை, ஆப்கானிஸ்தான் ரன்களை குவிக்க முற்பட்டது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் செடிகுல்லா அடல் 111 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், சீரான இடைவேளியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், வங்காளதேசத்தின் வெற்றிவாய்ப்பு அதிகரித்தது. ஆனால், இறுதியில் ஆப்கானிஸ்தான் வீரர் குவாஸ் அகமது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், பரபரப்பாக நடந்த 5ம் நாள் ஆட்டநேர இறுதியில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் டிராவில் முடிந்தது. சிறப்பாக ஆடிய ஆப்கானிஸ்தான் வீரர் குவாஸ் அகமது இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் குவித்து இப்போட்டி டிரா ஆக வழிவகுத்தார்.