சார்ஜா,
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே இடையே 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி சார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 19.5 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அகமது ஹமிசாய் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே தரப்பில் அந்த அணியின் நியூமென் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே 19.1 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஜிம்பாப்வேயை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
ஜிம்பாப்வே அணியின் ரியான் பர்ல் அதிகபட்சமாக 32 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் வீரர் பரூக்கி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.