ஆமதாபாத்,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிகாக் 59 ரன்களும், ரிங்கல்டன் 61 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஓமர் சாய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபுறம் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அசத்தினார்.
பின்னர் ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 18 ரன்கள் இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 17 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் மீண்டும் சமன் ஆனது.
இதனால் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 2வது சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் தொடர்ந்து 3 சிக்சர்கள் பறக்க விட்டபோதும், ஆப்கானிஸ்தான் 19 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், 2வது சூப்பர் ஓவரில் கேசவ் மகராஜ் வீசிய பந்துகளை ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் சிதறடித்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் டிரா என்ற நிலையில் இருந்தபோது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி வரை களத்தில் நின்ற அவரின் விடாமுயற்சிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சேஸிங்கின்போதும் 42 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அதிரடி காட்டி இருந்தார். தோல்விக்கு பின் குர்பாஸ் கண்ணீர்விட்டு அழுதார். இந்த சம்பவம் அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய டி20 உலக கோப்பை போட்டியில் போராடி தோல்வி அடைந்ததால் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு மங்கியது.
இதுவரை நடந்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே ஆப்கானிஸ்தான் அணியின் நிலை முடிவாகும். குரூப் ‘டி’ பிரிவில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் தலா 2 போட்டிகளை வென்று முதல் இரு இடங்களில் உள்ளன.