அபுதாபி,
ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரஹ்மத் ஷா, தனது முதல் கேப்டன்சி டெஸ்ட் போட்டியிலேயே சதம் மற்றும் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
வங்காளதேசத்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 346 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரஹ்மத் ஷா, 216 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் எடுத்தார். அவரது பொறுப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 240 ரன்கள் சேர்த்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 479 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடி வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மத் ஷா மீண்டும் நம்பிக்கை அளித்தார். 4-வது வீரராகக் களமிறங்கிய அவர், 124 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ரஹ்மத் ஷா தனது முதல் கேப்டன்சி டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் அடித்து விராட் கோலிக்கு பின் இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
கேப்டனாக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பது அரிய சாதனையாகும். இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் 115 மற்றும் 141 ரன்கள் என 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பலும் தனது முதல் கேப்டன்சி டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்துள்ளார்.
இப்பட்டியலில் விராட் மற்றும் கிரேக் மட்டுமே இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.