மும்பை,
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறி, பஞ்சாப் கிங்ஸ் அணியிலும், அர்ஷ்தீப் சிங் மும்பை அணியிலும் இணைந்துள்ளது குறித்து மும்பை அணியின் இணை உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை அணியில் இருந்து ஹர்திக் வெளியேறியுள்ள நிலையில், அவரது பங்களிப்புக்கு ஆகாஷ் அம்பானி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஹர்திக் பாண்டியா மும்பை அணியுடன் பல சிறப்பான தருணங்களைப் பகிர்ந்துள்ளார். இளம் வீரராக அணியில் இணைந்த அவர், சிறந்த கிரிக்கெட் வீரராக வளர்ந்து சர்வதேச அரங்கில் சாதித்ததையும், மீண்டும் மும்பை அணிக்கு திரும்பி கேப்டன் பொறுப்பை ஏற்றதையும் பெருமையுடன் பார்த்தேன். மைதானத்தில் ஹர்திக் வெளிப்படுத்திய ஆற்றலும், வெற்றிக்காகப் போராடும் மனப்பான்மையும் மும்பை அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தன. அவரது அடுத்தகட்ட கிரிக்கெட் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், “அர்ஷ்தீப்பின் வருகை எங்களது பந்துவீச்சுப் பிரிவுக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும். அனுபவம், திறமை, வெற்றிக்காகப் போராடும் ஆர்வம் ஆகிய அனைத்தும் அவரிடம் உள்ளன. அவரை மும்பை அணியின் குடும்பத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அர்ஷ்தீப் சிங், தொடர்ந்து 8 சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணிக்காக 96 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் பஞ்சாப் அணியின் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
மறுபுறம், ஹர்திக் பாண்டியா 2015-ம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி, அந்த அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். தற்போது இருவரும் புதிய அணிகளுக்குச் சென்றுள்ளதால், ஐபிஎல் 2027 தொடரில் அவர்களது ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.