கிரிக்கெட்

ஜாகீர் கான், இஷாந்த் சர்மா வரிசையில் ஆகாஷ் தீப்... நியூசிலாந்தில் புதிய சாதனை

அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக ஜாகீர் கான் உள்ளார்.

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஆகாஷ் தீப் இடம்பிடித்துள்ளார்.

அசத்திய ஆகாஷ் தீப்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் 31.3 ஓவர்கள் வீசி 99 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டாம் லாதம், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், மேட் ஹென்றி ஆகியோர் அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஆகாஷ் தீப் இடம்பிடித்துள்ளார்.

நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக ஜாகீர் கான் உள்ளார். அவர் 7 போட்டிகளில் 4 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இஷாந்த் சர்மா 6 போட்டிகளில் 3 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மதன்லால், ஜவகல் ஸ்ரீநாத், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா ஒருமுறை இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

சிறப்பான பங்களிப்பு

காயம் காரணமாக சில காலம் விளையாடாமல் இருந்த ஆகாஷ் தீப், இந்த ஆண்டில் டெஸ்ட் அணிக்குத் திரும்பினார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இதுவரை 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் முன்னணி விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராகத் திகழ்கிறார். அவரது பந்துவீச்சு சராசரி 24.87 ஆக உள்ளது. இந்தத் தொடரில் அவரது சிறந்த பந்துவீச்சு 5/99 ஆகும்.

முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 356 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர்களான டாம் லாதம் 59 ரன்களும், டெவான் கான்வே 31 ரன்களும் எடுத்தனர். பின்னர் கிளென் பிலிப்ஸ் மற்றும் டாம் பிளண்டெல் இணைந்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். தனது 50-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிளண்டெல் 211 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் குர்னூர் பிரார், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தடுமாற்றத்தில் இந்திய அணி

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 116 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமலும், தேவ்தத் படிக்கல் 21 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 17 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி ஒரு விக்கெட்டையும், கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். துருவ் ஜுரெல் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

SCROLL FOR NEXT