கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: காயமடைந்த ஜூவல் ஆண்ட்ரூவுக்கு பதிலாக அமீர் ஜாங்கூ சேர்ப்பு

ஜூவல் ஆண்ட்ரூ டி20 தொடரில் இருந்து முழுமையாக விலக்கப்படவில்லை.

லக்னோ,

இந்திய அணிக்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் விக்கெட் கீப்பர்-பேட்டர் அமீர் ஜாங்கூ மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜூவல் ஆண்ட்ரூவுக்கு விரலில் காயம்

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின்போது நமன் தீரின் கேட்சை பிடிக்க முயன்றபோது, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஜூவல் ஆண்ட்ரூவின் விரலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் விரலில் முறிவு எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் தொடர்ந்து மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.

ஜூவல் ஆண்ட்ரூ டி20 தொடரில் இருந்து முழுமையாக விலக்கப்படவில்லை. எனினும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமீர் ஜாங்கூ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடரில் அசத்திய அமீர் ஜாங்கூ

சமீபத்தில் முடிவடைந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அமீர் ஜாங்கூ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 58* ரன்கள், 114 ரன்கள் மற்றும் 67 ரன்கள் என 3 போட்டிகளில் மொத்தம் 239 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சுப்மன் கில் மற்றும் ஷாய் ஹோப்புக்கு அடுத்தபடியாக அந்த ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக அவர் திகழ்ந்தார்.

இதனால், டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் அமீர் ஜாங்கூவின் சேர்க்கை கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி

ஷாய் ஹோப் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்ட், ஷிம்ரோன் ஹெட்மையர், அகீல் ஹொசைன், அமீர் ஜாங்கூ, ஷமர் ஜோசப், குடாகேஷ் மோட்டி, கீமோ பால், கமில் பூரன், ரோவ்மன் பாவெல், ஷெர்பேன் ரூதர்போர்ட், குவென்டின் சாம்சன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர்.

நாளை தொடங்கும் டி20 தொடர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நாளை லக்னோவில் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT