ஆக்லாந்து,
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4-வது ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னரை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் அர்ஷ்தீப் சிங் தனது 150-வது டி20 சர்வதேச விக்கெட்டை கைப்பற்றினார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த சாதனையின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் 9-வது இடத்தை பிடித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் நிறைந்த இந்தப் பட்டியலில் 150 விக்கெட்டுகளை கடந்த மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு நியூசிலாந்தின் டிம் சவுத்தி, வங்காளதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், 260 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டும் இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் 4-0 என முன்னிலை பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.