கிரிக்கெட்

ஆசிய கோப்பை: பாகிஸ்தான் ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பாகிஸ்தான் அணியும், இலங்கை ஏ அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி, வங்காளதேசம் ஏ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷகதத் ஹூசைன் சிறப்பாக விளையாடி 103 ரன்கள் குவித்து சதம் அடித்தார்.

இதையடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் ஏ அணி, தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷஜாய்ப் கான் 50 ரன்களும், ஹசன் நவாஸ் 62 ரன்களும் எடுத்து அரைசதம் அடித்தனர்.

பாகிஸ்தான்

இவர்களுடன் அப்துல் சமத் 44 ரன்களும், பர்ஹான் யூசுப் ஆட்டமிழக்காமல் 46 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதனால் பாகிஸ்தான் ஏ அணி 45.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் ஏ அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஏற்கெனவே இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியும் இலங்கை ஏ அணியும் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

SCROLL FOR NEXT