நகோயா,
20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட் பிரிவில் இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது.
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் நாளை முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. போட்டியின் அதிகாரபூர்வ தொடக்க விழா நாளை நடைபெற உள்ள நிலையில், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதில் பெண்கள் கிரிக்கெட் போட்டி 20 ஓவர் வடிவில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அனைத்து அணிகளும் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில், நடப்பு சாம்பியனான இந்திய அணி இன்று காலிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியா-ஜப்பான் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, அரையிறுதியில் வங்காளதேசத்தை எதிர்கொள்ளும்.