மவுண்ட் மாங்கனுய்,
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆகிப் நபிக்கு, தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரருக்கான சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் நபி, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கவுகாத்தியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அந்தப் போட்டியில் 8.5 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 84 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
ஆனால், நியூசிலாந்து தொடரில் தனது பந்துவீச்சால் கவனம் ஈர்த்தார். முதல் ஒருநாள் போட்டியில் 6 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்த அவர், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. 2-வது போட்டியில் 7 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
3-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 4-வது போட்டியில் 8 ஓவர்கள் வீசி 59 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி போட்டியில் 10 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்து மைக்கேல் பிரேஸ்வெல்லின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்தத் தொடரில் 4 போட்டிகளில் பந்துவீசிய ஆகிப் நபி, மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சராசரியாக 32 ரன்கள் கொடுத்த அவர், ஓவருக்கு சராசரியாக 5.16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவரது சிறந்த பந்துவீச்சு 2/31 ஆகும்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆகிப் நபிக்கு, தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரருக்கான சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் துளசி ராம் யுவராஜ், ஆக்கிப் நபிக்கு சிறப்பு பதக்கத்தை வழங்கிப் பாராட்டினார். பதக்கம் பெற்ற ஆகிப் நபி, இந்திய அணி தொடரை வென்றதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அந்த வெற்றியில் தன்னால் பங்களிக்க முடிந்தது பெருமையாக இருப்பதாகக் கூறினார்.
நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 42.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷான் கிஷன், அக்சர் படேல் ஆகியோர் தலா 46 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆக்கிப் நபி ஒரு விக்கெட் எடுத்தார்.