கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

லாகூர்,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

2வது ஒருநாள் போட்டி

இந்நிலையில், பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

லாகூரில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக அந்த அணியின் கிரீன் 53 ரன்களும், இங்கிஷ் 51 ரன்களும், மேட் ரென்ஷா 43 ரன்களும் சேர்த்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் ஷாகின்ஷா அப்ரடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 44 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சதாப் கான் அதிகபட்சமாக 71 ரன்கள் சேர்ந்தார். இதன் மூலம் பாகிஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லிஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் சம நிலையில் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.