மெல்போர்ன்,
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில், அனுபவ சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இடம்பெறமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
39 வயதான நாதன் லயன், ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 577 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அந்த அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஷேன் வார்னே, கிளென் மெக்ராத்துக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் வெற்றிகளிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக அவரது செயல்பாட்டில் சரிவு காணப்படுகிறது. நடப்பு ஆண்டில் விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.
கடந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் லயன் 2 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார். அதன்பிறகு பிரிஸ்பேன் டெஸ்டில் அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர், அடிலெய்டு டெஸ்டில் மீண்டும் களமிறங்கினார்.
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அந்தத் தொடரில் லயன் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றிய நிலையில், தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில், நாதன் லயன் இடம்பெறமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
லயனுக்குப் பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்படுவாரா அல்லது ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியிலும் லயன் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து லயன் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்.
மறுபுறம், ஸ்வெப்சன் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஷெபீல்ட் ஷீல்டு தொடரிலும் 5 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்துள்ளார்.
மேலும், மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் கோரி ரோச்சிசியோலியும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இதுவரை 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், முதல் தர கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்துள்ளார். இதனால், நியூசிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான இடத்துக்குப் போட்டி அதிகரித்துள்ளது.