கிரிக்கெட்

நிச்சயதார்த்த விழாவில் எதிர்பாராத விபத்து... ஆஸ்திரேலிய வீரருக்கு அறுவை சிகிச்சை

சுமார் 20 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த மோரிஸ், சமீபத்தில்தான் மீண்டும் களத்திற்கு திரும்பினார்.

பெர்த்,

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் மோரிஸ், தனது நிச்சயதார்த்த விழாவில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் காயமடைந்துள்ளார்.

விபத்து

28 வயதான லான்ஸ் மோரிஸ், நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி கண்ணாடித் துண்டுகள் மீது விழுந்ததில் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, காயமடைந்த இடது கையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் பிரிவு நிர்வாகி கேட் ஹார்வி உறுதிப்படுத்தியுள்ளார்.

மோரிஸ் வலது கை பந்துவீச்சாளர். காயம் ஏற்பட்டிருப்பது அவரது இடது கையில்தான் என்பதால் அடுத்த வாரம் முதல் பயிற்சியில் பந்துவீசத் தொடங்குவார் என்றும், சுமார் 4 வாரங்களில் மீண்டும் போட்டிகளில் விளையாடும் வகையில் தயாராக இருப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மற்றொரு சோதனை

முதுகு அறுவை சிகிச்சை காரணமாக சுமார் 20 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த மோரிஸ், சமீபத்தில்தான் மீண்டும் களத்திற்குத் திரும்பினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக மேற்கு ஆஸ்திரேலியா அணி விளையாடிய பயிற்சி ஒருநாள் போட்டியில் மோரிஸ் களமிறங்கினார். 10 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட்டின் விக்கெட்டும் அடங்கும்.

சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு களமிறங்கிய அவருக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பியிருந்த மோரிஸுக்கு இந்த சம்பவம் மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT