கிரிக்கெட்

ஆஸ்திரேலிய வீராங்கனை அலைசா ஹீலி ஓய்வு அறிவிப்பு

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங் என பன்முக தன்மை கொண்ட அலைசா, 16 ஆண்டு கால கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடை பெறுகிறார்.

பெர்த்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில், டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என முழுமையாக வென்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 323 ரன்கள் குவித்தது. இதனால், 125 பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்த போட்டியுடன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலைசா ஹீலி ஓய்வு பெற்றார். இதற்கான அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டார். இதனால் அவர், அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்தும், 16 ஆண்டு கால கிரிக்கெட் விளையாட்டில் இருந்தும் விடை பெறுகிறார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங் என பன்முக தன்மை கொண்ட அவர் சர்வதேச கிரிக்கெட் ஓய்வு அறிவிப்புக்கு பின்னர் பேசும்போது, டி20 போட்டியில் பெற்ற தோல்விக்கு பின்னர் மீண்டு எழுந்து இதில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

இதற்காக நான் பெருமை கொள்கிறேன் என்றார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை எப்படி விளையாட வேண்டும் என கற்று கொள்வதே உண்மையில் முக்கியம். அதுவே பேட்டிங்கில் நம்மை கட்டமைக்க உதவும் என்றார். அதனால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அதிகம் விளையாடப்பட வேண்டும். அதனை நாம் வருங்காலத்திலும் காண்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.