கிரிக்கெட்

மனதை வென்ற ஆஸ்திரேலிய வீரர் - தனக்கு பரிசாக கிடைத்த பைக்கை வங்காளதேச வீரருக்கு வழங்கிய கூப்பர் கனோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் அணி கைப்பற்றியது.

சென்னை,

வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியே கிரிக்கெட் அணி 3 ஒருநாள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் அணி கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 274 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தவ்ஹித் ஹிரிதோய் 83 ரன்களும், லிட்டன் தாஸ் 58 ரன்களும், மொசடெக் ஹொசைன் 56 ரன்களும் எடுத்தனர்.

கூப்பர் கனோலி சதம்

பின்னர் 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியில், தொடக்க வீரர் கூப்பர் கனோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 149 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 277 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

பைக் பரிசு

இப்போட்டியில் 149 ரன்கள் குவித்து வெற்றிபெற உதவிய ஆஸ்திரேலியாவின் கூப்பர் கனோலி, இத்தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். இதற்கு அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால், தசைப்பிடிப்பிற்கு மத்தியிலும் களத்தில் நின்று 58 ரன்கள் குவித்த லிட்டன் தாஸின் மன உறுதியை பாராட்டி தனக்கு பரிசாக கிடைத்த பைக்கை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இது ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.