தர்மசாலா,
ஐ.பி.எல். தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று இரவு நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸை வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ப்ரம்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் அதிரடியாக ஆடிய பிரியான்ஷ் ஆர்யா பவர்பிளே முடிவதற்கு முன்னரே தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பவர்பிளே முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்தது. அப்போது மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த ப்ரம்சிம்ரன் சிங் 18(15) ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து பிரியான்ஷ் ஆர்யாவும் 56(33) ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர்-கூப்பர் கனோலி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். அப்போது மறுபுறம் நிதானமாக ஆடி வந்த கூப்பர் கனோலி 38(27) ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்த ஸ்டொய்னிஸ்1(2) மற்றும் ஷஷாங் சிங் 0(1) விக்கெட்டை ஸ்டார்க் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய சூர்யான்ஷ் ஷெட்கே, ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரி விளாசினார். இதன் மூலம் ஸ்கோர் 200-ஐ கடந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 59 (36)* ரன்கள் எடுத்தார். இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது.
அந்த அணியின் சார்பில் முதலாவதாக கே.எல்.ராகுல் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் அபிஷேக் போரல் 5 ரன்னிலும், கே.எ.ராகுல் 9 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஷாகில் பரகத் 13 ரன்களும், ஸ்டப்ஸ் 12 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்ததாக கேப்டன் அக்சர் பட்டேலுடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. இந்த ஜோடியில் அதிரடி காட்டிய அக்சர் படேல் 28 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்திருந்தநிலையில் 56 (30) ரன்களுக்கு கேட்ச் ஆனார். அடுத்ததாக டேவிட் மில்லருடன், அசுடோஷ் சர்மா ஜோடி சேர்ந்தார்.
அதிரடியாக ரன் சேர்த்த இந்த ஜோடியில் டேவிட் மில்லர் 27 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து நிலையில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். எதிர்முனையில் சிறப்பாக ஆடிய அசுடோஷ் சர்மா 24 ரன்களில் கேட்ச் ஆனார்.
இறுதியில் அதிரடி காட்டிய அகூப் நபி தார் 10 (2) ரன்களும், மாதவ் திவாரி 18 (8) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங், யாஷ் தாக்கூர் ஆகியோர் 2 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ், ட்வார்ஷுயிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.