image courtesy:PTI 
கிரிக்கெட்

18 வயதிலேயே.. ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை உடைத்த ஆயுஷ் மாத்ரே

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஆயுஷ் மாத்ரே சதம் விளாசினார்.

மும்பை,

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும்.

இதில் லக்னோவில் நடந்த ஒரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பாவை பந்தாடி 2-வது வெற்றியை தனதாக்கியது. விதர்பா நிர்ணயித்த 193 ரன் இலக்கை 17.5 ஓவர்களில் மும்பை எட்டிப்பிடித்தது. டி20 போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்த 18 வயதான ஆயுஷ் மாத்ரே 110 ரன்களுடனும் (53 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), ஷிவம் துபே 39 ரன்களுடனும் (19 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முன்னதாக இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே மும்பை அணிக்காக அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி முதல் தரப் போட்டிகளில் சதத்தை அடித்துள்ளார். அதே போல இந்தியாவில் நடைபெறும் விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் (லிஸ்ட்-ஏ 50 ஓவர்) தொடரிலும் அவர் சதத்தை அடித்துள்ளார்.

அந்த வகையில் அவர் தனது 18 வயதிலேயே ரஞ்சிக்கோப்பை (முதல் தரம் டெஸ்ட்), விஜய் ஹசாரே கோப்பை (லிஸ்ட்-ஏ ஒருநாள்), சையத் முஷ்டாக் அலி கோப்பை (டி20) ஆகிய 3 விதமான உள்ளூர் கிரிக்கெட்டில் சதத்தை அடித்துள்ளார்.

இதன் மூலம் 3 விதமான உள்ளூர் கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர் என்ற ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை உடைத்துள்ள மாத்ரே புதிய சாதனை படைத்துள்ளார். ரோகித் சர்மா தனது 19 வயதில் 3 விதமான உள்ளூர் கிரிக்கெட்டில் சதம் அடித்திருந்தார்.

அந்தப் பட்டியல்:

1. ஆயுஷ் மாத்ரே: 18 வருடம் 135 நாட்கள்

2. ரோகித் சர்மா: 19 வருடம் 339 நாட்கள்

3. உன்முக்த் சந்த்: 20 வருடம்

4. குயிண்டன் டி காக்: 20 வருடம் 62 நாட்கள்

5. அகமத் சேஷாத்: 20 வருடம் 97 நாட்கள்

SCROLL FOR NEXT