ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜாவுக்கு ஆதரவாக மீண்டும் குரல் கொடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக, பாட் கம்மின்ஸ் தெரிவித்த கருத்துக்கு வார்னர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட், மணல் காகிதத்தைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதைய ஆஸ்திரேலிய அணியில் இருந்த அனைவருக்கும் பந்தை சேதப்படுத்தும் திட்டம் தெரிந்திருந்ததாக உஸ்மான் கவாஜா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இதனை பாட் கம்மின்ஸ் முற்றிலும் தவறான கருத்து என்றும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.
கம்மின்ஸின் விளக்கத்துக்கு எதிராகப் பேசிய டேவிட் வார்னர் கூறியதாவது:
உஸ்மான் கவாஜா தனது புத்தகத்தில் எழுதிய கருத்துகளை நான் தொடர்ந்து ஆதரிக்கிறேன்.அவர் எழுதியது உண்மை என்றே நான் நம்புகிறேன்.தற்போது கவாஜா எதிர்கொள்ளும் நிலையை நினைத்து வருத்தப்படுகிறேன்.இன்று அணியின் கேப்டன் கம்மின்ஸ், கவாஜாவைத் தனியாகக் குற்றவாளியாக்கும் வகையில் பேசியுள்ளார். இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
இந்தப் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் பேன்கிராஃப்ட் ஆகிய மூவருக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து வார்னர் கூறுகையில்:
"இந்த விவகாரத்தில் நாங்கள் மூவரும் மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளோம். கடந்த எட்டு ஆண்டுகளாக இதுபற்றி நான் பேசவில்லை. ஆனால், இன்றும் அதன் விளைவுகளை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.
நாங்கள் ஏற்றுக்கொண்ட தண்டனையைத் தாண்டியும், தினமும் வெளியே செல்லும்போது விமர்சனங்களையும் அவமானங்களையும் எதிர்கொள்கிறோம்.
எனக்கும், ஸ்டீவ் ஸ்மித்துக்கும், கேமரூன் பேன்கிராஃப்ட்டுக்கும் இதைவிட மோசமான பாதிப்பு வேறு யாருக்கும் ஏற்பட்டிருக்காது.
அந்தக் காலகட்டத்தில் நானும் எனது மனைவியும் குழந்தையை இழந்தோம். உண்மை ஏற்றுக்கொள்ளப்படும் வரை இந்த விஷயம் எனக்கு மிகுந்த வேதனையைத் தரும்" என்று தெரிவித்துள்ளார்.