கிரிக்கெட்

வங்காளதேச ஏ அணியில் புதிய பொறுப்பில் முகமது அஷ்ரபுல்

வங்காளதேச ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹபிபுல் பஷார் தொடர்ந்து செயல்படுகிறார்.

வங்காளதேச அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான முகமது அஷ்ரபுல், தற்போது வங்காளதேச ஏ அணியின் உதவிப் பயிற்சியாளராக புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். சமீபத்தில் வங்காளதேச தேசிய அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்ட அவர், கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற உள்ள ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடரை முன்னிட்டு இந்தப் புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். வங்காளதேச ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹபிபுல் பஷார் தொடர்ந்து செயல்படுகிறார்.

அஷ்ரபுல்

தனது புதிய பொறுப்பு குறித்து அஷ்ரபுல் கூறுகையில், தான் தலைமைப் பயிற்சியாளர் கிடையாது உதவிப் பயிற்சியாளராக வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவதே தனது பணி. பயிற்சியாளர்களைவிட வீரர்களுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கும். வீரர்களின் திறமையை மேம்படுத்தி அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை உருவாக்க உதவுவதே தங்களது நோக்கம். தேசிய அணியின் வீரர்களுடன் மட்டுமின்றி உள்ளூர் முதல்தர கிரிக்கெட் மற்றும் டாக்கா பிரீமியர் லீக் போட்டிகளிலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் இருப்பதால் இந்தப் புதிய பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

வங்காளதேச ஏ அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நவம்பர் 19-ம் தேதி ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து நவம்பர் 21-ம் தேதி ஆப்கானிஸ்தான் ஏ அணியுடனும், நவம்பர் 23-ம் தேதி இலங்கை ஏ அணியுடனும் மோதுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளிலும், இறுதிப்போட்டி நவம்பர் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற முதலாவது ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்து வங்காளதேசம் இரண்டாவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT