கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு... 22 வயது இளம் வீரருக்கு வாய்ப்பு

நயீம் ஷேக் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார்.

டாக்கா,

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வாங்காளதேச அணி விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தப் போட்டி நவம்பர் 15-ம் தேதி துவங்குகிறது.

இந்நிலையில், இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 22 வயதான இளம் பேட்டர் மஹ்பிஜுல் இஸ்லாம் முதல்முறையாக தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.

முக்கிய மாற்றங்கள்

தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சுழற்பந்து வீச்சாளர் நயீம் ஹசனுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் காலித் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர் நயீம் ஷேக் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது களத்தில் பீல்டிங் செய்தபோது கணுக்காலில் காயமடைந்த தொடக்க ஆட்டக்காரர் ஷாத்மான் இஸ்லாம் தென் ஆப்பிரிக்க தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.

அதேபோல், முதல் டெஸ்ட் போட்டியின்போது தலையில் காயமடைந்த மோமினுல் ஹக், கட்டாய 7 நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

வங்காளதேச அணி

நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், நயீம் ஷேக், மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், தவ்ஹீத் ஹிரிடோய், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், ஷோரிபுல் இஸ்லாம், எபாடத் ஹொசைன், காலித் அகமது, மஹ்பிஜுல் இஸ்லாம்.

எப்போது போட்டிகள்?

தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 15-ம் தேதி ஜோகன்னஸ்பரிலும், 2-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 23-ம் தேதி செஞ்சூரியனிலும் தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தற்போது 5-வது இடத்தில் உள்ள வங்காளதேச அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் 1-0 எனப் பின்தங்கியுள்ளது. தற்போது அந்தத் தொடரின் 2-வது டெஸ்டில் 369 ரன்கள் என்ற இலக்கையும் துரத்தி வருகிறது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் வங்காளதேச அணிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT