வங்காளதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹிம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில் வங்காளதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியின்போது முஷ்பிகுர் ரஹிமுக்கு இடது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இடுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியில் வீக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது
இதுகுறித்து வங்காளதேச அணியின் பிசியோதெரபிஸ்ட் பய்ஜேதுல் இஸ்லாம் கான் கூறுகையில், முதல் டெஸ்ட் போட்டியின்போது முஷ்பிகுர் ரஹிம் இடது இடுப்புப் பகுதியில் கடுமையான வலியால் அவதிப்பட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ. பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருக்க அவருக்கு உடனடி ஓய்வும், உரிய மறுவாழ்வு சிகிச்சையும் தேவைப்படுகிறது. இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
முஷ்பிகுர் ரஹிம் காயம் காரணமாக விலகியிருப்பது வங்காளதேச அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.