கிரிக்கெட்

வங்காளதேச வீராங்கனை மொஸ்டரி வரலாற்று சாதனை

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரையும் மொஸ்டரி பதிவு செய்தார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச வீராங்கனை சோபானா மொஸ்டரி 118 ரன்கள் விளாசி வரலாற்றுச் சாதனை படைத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சதமடித்த முதல் வங்கதேச வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இருப்பினும், அவரது அபாரமான ஆட்டம் வங்கதேச அணியின் வெற்றிக்கு உதவவில்லை. ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் பீல்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. 7.2 ஓவர்களில் வெறும் 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட் மற்றும் கிம் கார்த் ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய சோபானா மொஸ்டரி, கேப்டன் நிகர் சுல்தானாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பொறுமையாக விளையாடிய அவர், பின்னர் அதிரடியாக ரன்களைக் குவித்தார். 134 பந்துகளைச் சந்தித்த மொஸ்டரி 18 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்தார்.

மொஸ்டரியும் நிகர் சுல்தானாவும் நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தனர். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த விக்கெட்டுக்கும் அமைந்த அதிகபட்ச கூட்டணி இதுவாகும். நிகர் சுல்தானா ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் வங்கதேச அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. மேலும், வங்காளதேச மகளிர் அணியின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரையும் மொஸ்டரி பதிவு செய்தார்.

221 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜியா வோல் மற்றும் போப் லிட்ச்பீல்ட் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். லிட்ச்ஃபீல்ட் 51 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். மறுபுறம் வோல் 97 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 131 ரன்கள் குவித்தார். இதில் 19 பவுண்டரிகள் அடங்கும். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தனர்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 28.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 222 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தோல்வியடைந்தாலும் மொஸ்டரியின் சதம் வங்கதேச மகளிர் கிரிக்கெட்டுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சதமடித்த முதல் வங்காளதேச வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

SCROLL FOR NEXT