புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, பிருந்தாவனத்தில் உள்ள ஆன்மிக குரு பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்துக்குச் செல்ல ரூ.5 கோடி பெற்றதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்துக்கு விராட் கோலி செல்வதற்காக அவருக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு “முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது மற்றும் உண்மைக்கு மாறானது” என்று விராட் கோலியின் தரப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விராட் கோலியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், பிரேமானந்த் மகாராஜ் மீது விராட் கோலி கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் மரியாதையின் காரணமாகவே அவரைச் சந்தித்து வருகிறார். இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளை சரிபார்த்து, ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் பிரேமானந்த் மகாராஜை ஏற்கனவே பலமுறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.