கிரிக்கெட்

பவுமா சதம்: சரிவில் இருந்து மீண்ட தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 127.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

கெபேஹா,

ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கெபேஹாவில் நடந்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் இரு நாட்களில் 43 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கு 97 ரன்களுடன் தள்ளாடியது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று கேப்டன் பவுமாவின் நேர்த்தியான பேட்டிங்கால் தென்ஆப்பிரிக்கா சரிவில் இருந்து கம்பீரமாக நிமிர்ந்தது. அவருக்கு மார்கோ யான்சென் (85 ரன், 9 பவுண்டரி, 3 சிக்சர்), சைமன் ஹார்மர் (82 ரன். 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) நன்கு ஒத்துழைப்பு தந்தனர். தனது 5-வது சதத்தை நிறைவு செய்த பவுமா 179 ரன் களில் (334 பந்து, 18 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். டெஸ்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அத்துடன் தென்ஆப்பிரிக்கா இன்னிங்சை முடித்துக் கொண்டது.

இதன்படி தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 127.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்காட் போலன்ட் 5 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஆட்டநேர முடிவில் 4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 3 ரன் எடுத்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

SCROLL FOR NEXT