சென்னை,
2026-27 ஆண்டுக்கான பிபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், தொடக்க ஆட்டத்திற்கான முதன்மை மைதானமாக சேப்பாக்கத்தை தேர்வு செய்து, டிஎன்சிஏ மற்றும் பிசிசிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக முடிந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அரசு அதிகாரிகள் இடையிலான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறன.
இதற்கிடையில், சேப்பாக்கத்தில் போட்டி நடத்துவதில் சில சவால்களும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய நேரம் இந்திய நேரத்தை விட 1.5 மணி முதல் 4.5 மணி நேரம் வரை முன்னதாக இருப்பதால், தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான நேர ஒத்திசைவு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வழக்கமாக இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஐபிஎல் போட்டிகள், ஆஸ்திரேலிய நேரப்படி நள்ளிரவாகும். எனவே, இந்திய நேரப்படி மதியம் நடைபெறும் போட்டிகள் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு இரவு நேரத்தில் நேரலையாக பார்க்க ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை இல்லாததும் ஒரு சவாலாக பார்க்கப்படுகிறது. தற்போது மெல்போர்ன்-டெல்லி மற்றும் சிட்னி-பெங்களூரு இடையே மட்டுமே நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பிசிசிஐ இறுதி அனுமதி வழங்கினால், சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு அடுத்ததாக பிபிஎல் திருவிழாவையும் சென்னை ரசிகர்கள் நேரில் காணும் வாய்ப்பு உருவாகும்.