கிரிக்கெட்

வயதை குறைத்து காட்டி மோசடி... இந்திய யு-19 வீரருக்கு 2 ஆண்டுகள் தடை!

கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான யு-19 டெஸ்ட் போட்டியில் ரோகித் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மும்பை,

இந்திய யு-19 அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரோகித் யாதவுக்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட பி.சி.சி.ஐ. தடை விதித்துள்ளது.

முரண்பாடு

வயதை குறைத்து காட்டி மோசடி செய்ததாக இந்திய யு-19 அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரோகித் யாதவுக்கு எதிராக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, ரோகித் யாதவின் பிறந்த ஆண்டு தொடர்பான பல்வேறு பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவரது பிறந்த ஆண்டு 2007-ல் இருந்து 2006 ஆகவும், பின்னர் 2009 ஆகவும் மாற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வயது மோசடி தொடர்பாக அவர் மீது பி.சி.சி.ஐ. ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

6 விக்கெட்டுகள்

கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான யு-19 டெஸ்ட் போட்டியில் ரோகித் யாதவ் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதைத்தொடர்ந்து, ராஜ்கோட்டில் ஆஸ்திரேலிய யு-19 அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடருக்கான இந்திய அணியிலும் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளராக ரோகித் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

மாற்று வீரர்

ரோகித் யாதவுக்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளநிலையில், ஆஸ்திரேலிய யு-19 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பி.சி.சி.ஐ. விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT