கிரிக்கெட்

பென் மெக்டெர்மோட் சதம்: அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது கோபர்ட் ஹூரிகேன்ஸ்

பிக்பாஷ் 20 ஓவர் போட்டியில் பென் மெக்டெர்மோட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

ஆஸ்திரேலியா,

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கோபர்ட் ஹூரிகேன்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மாட் ரென்ஷா 41 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார்.

இதை தொடர்ந்து கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.அந்த அணியின் பென் மெக்டெர்மோட் அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். 5 சிக்ஸர்களை விளாசிய அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது.