கிரிக்கெட்

விக்கெட் எடுக்காத பும்ரா.. ‘சில நேரம் அதிர்ஷ்டமும் வேண்டும்’ - ஜெயவர்த்தனே சொல்கிறார்

தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு எங்களது பந்து வீச்சு இல்லை என மும்பை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

மும்பை,

மும்பை அணி இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி கண்டு துவண்டு போயுள்ளது. மும்பை அணி எஞ்சிய 9 ஆட்டங்களில் குறைந்தது 7-ல் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் (5 ஆட்டத்தில் 106 ரன்), திலக் வர்மா (43 ரன்) ஜஸ்பிரித் பும்ரா (ஒரு விக்கெட் கூட எடுக்க வில்லை) ஆகியோரின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை.

இந்த நிலையில், மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே கூறுகையில், 'ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. ஆனால் பவர்-பிளேயில் அழுத்தம் கொடுக்கவில்லை என்பது தான் பிரச்சினை. பும்ராவின் பந்து வீச்சில் பெரிய அளவில் 'ரிஸ்க்' எடுக்க தேவையில்லை என்பது எதிரணியினருக்கு தெரியும். அவரும் சில வித்தியாசமான முயற்சிகளை செய்து தான் பார்க்கிறார். ஆனால் எதிரணி வீரர்கள் நன்றாக பேட் செய்கிறார்கள். அதனால் தான் அவரால் விக்கெட் எடுக்க முடியவில்லையா? என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வரும் போது அவர் லேசான காயங்களால் அவதிப்பட்டதால் ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக பந்து வீசினார். போக போக வேகத்தை அதிகரித்துக் கொண்டார். கடந்த சில ஆட்டங்களில் இதை கவனித்துள்ளோம். பந்து வீசுவதில் நல்ல நிலையிலேயே இருக்கிறார். சில நேரம் அதிர்ஷ்டமும் வேண்டும். ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆரம்பத்தில் சில அருமையான பந்துகளை வீசினார். ஆனால் போதுமான அதிர்ஷ்டம் இல்லை. அவர் விக்கெட்டுகளை வீழ்த்த தொடங்கி விட்டால், அதன் பிறகு அவரை கட்டுப்படுத்துவது கடினமாகி விடும்.

ஏற்கனவே சொன்னது போல் ஒரு பந்து வீச்சு குழுவாக வெவ்வேறு மைதானங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு எங்களது பந்து வீச்சு இல்லை. இந்த குறையை சரி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்ச்சியான தோல்விகளால் ஹர்திக் பாண்ட்யா மீது மட் டும் நெருக்கடி இருப்பதாக நினைக்கவில்லை. இதில் எங்கள் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது' என்றார்.