மும்பை,
மும்பையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உலகளாவிய விளையாட்டு தள அறிமுக நிகழ்ச்சியில் பேசிய தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய டி வில்லியர்ஸ் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சூர்யவன்ஷி குறித்து பேசினார். டி வில்லியர்ஸ் கூறியதாவது; சூர்யவன்ஷி அபாரமான திறமை கொண்டவர். டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்ற கேள்விக்கு என்னால் உறுதியாக பதிலளிக்க முடியாது. அவர் விரும்பினால் நிச்சயமாக விளையாட முடியும். ஆனால் முக்கியமான கேள்வி, அதில் உண்மையாகவே அவருக்கு விருப்பம் இருக்கிறதா என்பதுதான். அதற்கான பதிலை காலம்தான் சொல்லும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான திறமையும், தகுதியும் அவரிடம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது எப்போதும் எளிதாக இருக்காது. இதை நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். அவர் நீண்ட நேர போட்டிகளில் விளையாட முடிவு செய்தால் சில சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் அவற்றை சமாளிக்கும் திறனும், கடினமாக உழைக்கும் மனப்பக்குவமும் அவரிடம் உள்ளது. எனது தனிப்பட்ட கருத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முயற்சிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு குறைவாகவே உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்தார்.