மெல்போர்ன்,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் 3, 4-வது போட்டிகளில் இந்திய அணியின் ஆடும் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெறாததற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
இத்தொடரின் முதல் ஆட்டத்தில் 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், 2-வது ஆட்டத்தில் 53 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். அதன்பிறகு அவர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெறாததற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில்,
“குல்தீப் யாதவ் குறித்து எனது கருத்தை ஏற்கெனவே பலமுறை தெளிவாகக் கூறியுள்ளேன். அவர் அணியின் முதல் தேர்வு சுழற்பந்து வீச்சாளராக இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரர். எந்த வகை போட்டியாக இருந்தாலும், எதிரணியை ஆட்டமிழக்க செய்வதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல கேப்டன்கள் வழக்கமான அணுகுமுறையுடன் விளையாடுகிறார்கள். எதிரணி எவ்வளவு ரன்கள் எடுத்தாலும், அதைத் துரத்தி வென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் எதிரணியை ஆட்டமிழக்க செய்வதில் போதிய கவனம் செலுத்துவதில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளநிலையில், தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. தற்போது மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.