கேப் டவுன்,
தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்சில் 134.4 ஓவர்களில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற்றன. இதனால், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வரும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் மார்கஸ் அகர்மென் அதிகபட்சமாக 95 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிச்சேல் ஸ்டார்க் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இறுதியில் ஆஸ்திரேலிய அணி 125.1 ஓவர்களுக்கு 429 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அத்துடன், தென் ஆப்பிரிக்காவை விட 100 ரன்கள் முன்னிலை பெற்றது. ஜோஸ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவர் 102 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கேரி 80 ரன்னும், ரென்ஷா 74 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகளும், ரென்ஷா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிஸ்சில் பேட்டிங் செய்தது. அந்த அணி 181 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தது. அப்போது ரிக்கல்டன் மற்றும் முல்டர் நிதாமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது. இருவரும் சதமடித்து அசத்தினர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்சில் 134.4 ஓவர்களில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அத்துடன் 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நாளை 5-ம் நாள் ஆட்டம் நடைபெறும். கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றி இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டிப்பிடிக்குமா? அல்லது, ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் செய்து தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால் கடைசி நாள் ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.